மன்னார் பிரதேச சபையின் 2027 வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு இடைநிறுத்தம்!
மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து தவிசாளர் வெளியேறியுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் 18 ஆவது அமர்வு நேற்றைய தினம் (18-11-2026) இடம்பெற்றது.
இதன்போது 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்மொழிவு தொடர்பில் ஏகமனதான ஆதரவிற்கு தவிசாளரினால் கோரப்பட்டது.
கட்சி உறுப்பினர்கள்
இதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சிகளும் தங்களது நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஜே.எம். ஜப்ரானின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியான கருத்துக்கள், அபிவிருத்தியில் பாராபட்சம் மற்றும் இன்னும் பல்வேறு முறைகேடுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கெடுப்பின் போது 22 உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஏனைய உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்வதற்கு முன்னர் தவிசாளர் தன் அதிகாரத்தின் நிமித்தம் சபையை ஒத்தி வைத்து எழுந்து சென்றுள்ளார்.
வாக்களித்தவர்களில் உதவிதவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் தவிசாளர் வாக்கெடுப்பின் இடை நடுவில் சபையை ஒத்தி வைத்து வெளியேறிச் சென்று உள்ளார்.
இவ்வாறு சபையை இடை நடுவே ஒத்தி வைத்து தவிசாளர் வெளியேறியமை குறித்து சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


