சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: மத்திய கிழக்கு பதற்றத்தால் விநியோக அச்சம்
அமெரிக்காவின் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் இன்று (18) மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.65 சதவீதத்தால் குறைந்து 85.45 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.17 சதவீதத்தால் குறைந்து 92.98 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்க பெற்றோலிய நிறுவகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அமெரிக்காவின் மசகு எண்ணெய் கையிருப்பு 5.28 மில்லியன் பீப்பாய்களால் அதிகரித்துள்ளது.

மேலும், பெற்றோல் கையிருப்பு 5.12 மில்லியன் பீப்பாய்களாலும், டீசல் உள்ளிட்ட காய்ச்சி வடிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு 351,000 பீப்பாய்களாலும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தொடர்ச்சியான இராணுவ மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக எண்ணெய் விலை வீழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனை நோக்கி நடத்தப்பட்ட ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தமது பாதுகாப்புப் படையினர் இடைமறித்துள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
மாற்றுப் பாதைகள்
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்த திரவப் பெற்றோலிய எரிவாயு (LPG) கப்பல் ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சவூதி அரேபியாவின் கிழக்கு - மேற்கு எண்ணெய்க் குழாயின் இரண்டு உந்துநிலையங்களைக் குறிவைத்து ஐந்து ட்ரோன்களை ஏவியதாக ஈரானுக்கு ஆதரவான ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், மாற்றுப் பாதைகள் ஊடாக எண்ணெய் விநியோகம் ஓரளவு மீள ஆரம்பித்தாலும், ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்புவதற்கான சாத்தியம் தற்போதைய நிலையில் இல்லை என LSEG ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக சர்வதேச எரிசக்திச் சந்தை தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |