இஸ்லாத்திற்கு எதிரான இறைநிந்தனை பௌத்த மதத்துடன் ஒத்துப்போகாது! ஞானசார தேரருக்கு நீதிமன்றில் கடும் எச்சரிக்கை
இஸ்லாமிய மதத்தை அவமதித்தமை குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட கலாகொடாத ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்க்கமான தீர்ப்பின் சாராம்சம் பேசுபொருளாகியுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டணையை இரத்து செய்யக்கோரி ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து நேற்று இடம்பெற்ற விசாரணையின் தீர்ப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது நீதியரசரால் அவருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மத போதனைகளின் அடிப்படை
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, பிரதிவாதியான ஞானசார தேரர் zoom தொழில்நுட்பத்தின் வழியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணையின் முடிவில் ஞானசார தேரருக்கு நீதியரசரால் வழங்கப்பட்ட எச்சரிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது.
அன்பு, கருணை மற்றும் இரக்கம் ஆகிய உன்னத குணங்கள் நிறைந்த புத்தரின் தத்துவத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், மதத் தலைவர்கள் எப்போதும் தங்கள் மத போதனைகளின் அடிப்படையில் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது தனது தத்துவத்தின் மூலம் வன்முறையை நிராகரித்த புத்தரின் வழிகாட்டுதலை மேற்படி நினைவுகூர்ந்து, தெய்வநிந்தனைக் குற்றத்திற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு கடுங்காவல் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பி. குமாரன் ரத்னம் உறுதிசெய்தார்.
மேலும், தன்னை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரரால் தாக்கல் செய்த மேல்முறையீட்டையும் அவர் நிராகரித்தார். இது அவருக்கு வழங்கப்பட்ட வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல.
நல்லிணக்கத்திற்கு தடை
பௌத்த தத்துவத்தில் வன்முறை பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்று நீதியரசர் சுட்டிக்காட்டியதோடு, முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, பிரதிவாதியான தேரருக்கு எதிராக அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றும் வெளிப்படையாகக் கூறினார்.

குரகல கோயில் தொடர்பாக 2016 மார்ச் 30 அன்று கொழும்பின் கிருலபனை பகுதியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த சட்ட நடவடிக்கையின் தொடக்கம் பதிவு செய்யப்பட்டது.
ஞானசார தேரர் வெளிப்படுத்திய கருத்துக்கள் இஸ்லாத்தை அவமதிப்பதாகவும், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு கடுமையாகத் தடையாக இருப்பதாகவும் கூறி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதற்காக, ஞானசார தேரருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருந்தது.
தனது தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிடும் நோக்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று குறிப்பிட்ட நீதியரசர் குமாரன் ரத்னம், மேலதிக நடவடிக்கைக்காக தீர்ப்பின் நகல்களை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, ஞானசார தேரரின் மேல்முறையீட்டு செயல்முறை முடிவடைந்தது. இது, புத்தரின் கருணைத் தத்துவத்தையும் ஒரு சமயத் தலைவர் கொண்டிருக்க வேண்டிய நன்னடத்தையையும் நீதிமன்றம் ஆழமாக நினைவூட்டியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |