எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி: பிரித்தானியாவில் அதிகரித்த பணவீக்கம்
பிரித்தானியாவில் பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த உயர்வு, இங்கிலாந்து மத்திய வங்கி அடுத்த மாதமும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இது தொடர்பில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணவீக்க வீதம்
குறித்த அறிக்கையின் படி,
முந்தைய மாதத்தில் 3.5 சதவீதமாக இருந்த வருடாந்திரப் பணவீக்க வீதம் ஒக்டோபர் மாதத்தில் 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஈரான் போர் மற்றும் அதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகளால் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விலைகள் உயர்ந்தமையே இந்தப் பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
வீட்டு உபயோக எரிசக்திக் கட்டணங்கள் உயரவுள்ளதால் எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் இங்கிலாந்து மத்திய வங்கியின் இலக்கான இரண்டு சதவீதத்தையும் தாண்டி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தின் உச்ச அளவு
இதனால் டிசம்பர் மாதத்திலும் வட்டி வீதத்தை மீண்டும் உயர்த்துவதைத் தவிர்ப்பது கடினமாகத் தெரிகிறது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் சுரேன் திரு தெரிவித்துள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்து மத்திய வங்கி தனது பிரதான வட்டி வீதத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 3.75 சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தியிருந்ததுடன் பிரித்தானியாவின் கடன் வாங்கும் செலவுகளின் எதிர்காலம் ஈரான் போரின் போக்கைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் வாரங்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் இந்தச் சரிவு நீடிக்குமானால் அடுத்த கோடைகாலத்தில் வட்டி வீதம் ஐந்து சதவீதத்தை எட்டும் என மத்திய வங்கி கணித்துள்ள பணவீக்கத்தின் உச்ச அளவு குறையக்கூடும்.
இது இங்கிலாந்து மத்திய வங்கி மட்டுமன்றி ஏனைய நாட்டு மத்திய வங்கிகளும் எதிர்காலத்தில் வட்டி வீதங்களை உயர்த்த வேண்டிய தேவையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |