ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் மாபியா ராஜ்ஜியம்: அதிர்ச்சியூட்டும் காணொளிகள்
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நாடு தழுவிய அளவில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
காவல்துறை அதிகாரியே அல்லாத 'சையது முஹம்மது ஃபலீல்' என்பவர், ஏறாவூர் காவல் நிலையத்திற்குள் கிரிக்கெட் மட்டையுடன் நுழைந்து இளைஞர்களைத் தாக்கி விசாரணை நடத்துவதாகக் காட்டும் காணொளிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காவல்துறை அதிகாரியாக இல்லாத ஒருவருக்கு காவல் நிலையத்திற்குள் நுழைந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி கிடைத்தது எப்படி என்றும், அவருக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றனவா என்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதே சமயம், போதைப்பொருள் வழக்குகளில் சிக்கவைத்துவிடுவதாக மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதாகக் கூறப்படும் தொலைபேசிக் குரல் பதிவுகள், வீடுகளிலும் வாகனங்களிலும் போதைப்பொருட்களை மறைத்துவைத்து அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், இராணுவச் சீருடை மற்றும் இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்படும் மர்ம நபரின் புகைப்படம் மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள் எனப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு மாபியா பாணியிலான வலையமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இவ்வாறு போதைப்பொருளை ஒழிக்க வேண்டியவர்களே சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோகின்றார்களா என்ற கடுமையான குற்றச்சாட்டுகளையும், அவற்றுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் முன்வைத்து, உரிய அதிகாரிகளால் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது உண்மைகள் சிறப்புப் நிகழ்ச்சி...
தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |