ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவை:புது டெல்லிக்கு தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கையின் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே முன்மொழியப்பட்ட சர்வதேச பயணிகள் படகு சேவை உட்பட, ஐந்து முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு இந்திய மத்திய அரசிடம் நிதி உதவியைக் கோரியுள்ளது.
மொத்தமாக 96 பில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி உதவி கோரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்று (17) புது டில்லியில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலிடம் இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார்.
சர்வதேச படகு சேவைக்கு வழிவகுக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட ராமேஸ்வரம் துறைமுக மேம்பாட்டிற்கு 1.18 பில்லியன் இந்திய ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9 பில்லியன் முதலீடு
ராமேஸ்வரமும் தலைமன்னாரும் சுமார் 26 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளன. மற்ற முன்மொழிவுகளில், கடலூரில் 47 பில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய ஆழ்கடல் துறைமுகம், மற்றும் மெரினா, மகாபலிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கடல்சார் நடைபாதைகள் மற்றும் படகுத் தளங்கள் ஆகியவை அடங்கும்.

பிந்தைய திட்டத்தில், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே சுமார் 9 பில்லியன் இந்திய ரூபாய் முதலீட்டில் முன்மொழியப்பட்ட பயணிகள் படகு சேவையும் அடங்கும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவைக்காக தமிழக அரசு முன்னதாக மத்திய அரசின் ஆதரவைக் கோரியிருந்தது.
முன்மொழியப்பட்ட ராமேஸ்வரம்-தலைமன்னார் இணைப்புக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள், குடிவரவு மற்றும் சுங்க வசதிகள், கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பு ஆகியவை தேவைப்படும். சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இத்திட்டம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு நாட்கள்
இதற்கிடையில், கூடுதல் படகு நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் தற்போதுள்ள நாகப்பட்டினம்-காங்கேசன்துறை சேவையை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் தமிழகம் ஆராய்ந்து வருகிறது.

ஒகஸ்ட் 2024இல் தொடங்கப்பட்ட இந்தத் தனியார் படகுச் சேவை, பருவமழையின் போது தற்காலிகமாகத் தடைபட்டு, பெப்ரவரி 2025இல் மீண்டும் தொடங்கியது. மார்ச் முதல் நவம்பர் வரை வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்150 இருக்கைகள் கொண்ட இந்தப் படகில், சராசரியாக சுமார் 60% பயணிகள் நிரம்பியுள்ளனர்.
செப்டம்பர் மாதம் வரை, இந்தச் சேவை நாகப்பட்டினத்திலிருந்து 21,812 பயணிகளையும், காங்கேசன்துறையிலிருந்து 26,242 பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ளது. இந்தப் பயண நேரம் சுமார் நானரை மணி நேரம் ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |