இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்...! தாய்லாந்துக்கு இனி விசா இன்றி பயணிக்கலாம்
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்களிப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த (17.11.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் பிளாய்தலே லக்ஷ்மிசெங்ஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது அவரது பிரதிநிதிக்கு அதிகாரம் வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சாதாரண கடவுச்சீட்டு
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி மற்றைய நாட்டிற்குள் பிரவேசிக்கவும், வெளியேறவும் அல்லது அந்நாட்டின் ஊடாகப் பயணிக்கவும் முடியும்.

இதன்படி, ஒரு பயணத்தின்போது அதிகபட்சமாக 30 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
மேலும், 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.
எனினும், 30 நாட்களுக்கு மேலாகத் தங்கியிருக்க விரும்புவோர், வேலைவாய்ப்பு, கல்வி அல்லது விசேட அனுமதி தேவைப்படும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஒப்பந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுமக்களின் அமைதி, சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இடைநிறுத்த முடியும்.
இராஜதந்திர வழிமுறைகள்
அவ்வாறு ஒப்பந்தத்தை இடைநிறுத்தவோ அல்லது இரத்துச் செய்யவோ தீர்மானிக்கப்பட்டால், குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாக இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக எழுத்து மூலம் மற்றைய நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

மேலும், இரு நாடுகளும் தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் 60ஆவது நாளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பும் எந்தவொரு தரப்பினரும் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக எழுத்து மூலம் அறிவிக்க முடியும்.
அவ்வாறு அறிவிக்கப்பட்டு 90 நாட்களின் பின்னர் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் இலகுவாக்கப்படுவதுடன், நெருக்கமான பௌத்த மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கலாசார சுற்றுலா மற்றும் மதச் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் தாய்லாந்தின் சுற்றுலாத்துறைக்கும் இந்த ஒப்பந்தம் நன்மை பயக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |