உக்ரைனில் பிரான்ஸ் இராணுவ வீரர்கள்: ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பராமரிப்பதற்கும் உக்ரைனியப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தமது இராணுவப் பணியாளர்களை அவ்வப்போது உக்ரைனுக்கு அனுப்பி வருவதை பிரான்ஸ் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்குக் ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு உக்ரைனில் பிரான்ஸ் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளமையானது போரில் ஐரோப்பாவின் நேரடிப் பங்கேற்பிற்குச் சமமானது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஆயுதப் படைகள்
உக்ரைனில் பிரான்ஸ் துருப்புக்கள் இரகசியமாகச் செயற்படுவதாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.

இதையடுத்து பிரான்ஸ் ஆயுதப் படைகள் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஆலிஸ் ரூஃபோ (Alice Rufo) நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதனடிப்படையில் பிரான்ஸ் வீரர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர்கள் போர் முனையிலிருந்து வெகு தொலைவில் இருந்து கொண்டு குறுகிய காலப் பயிற்சி மற்றும் இராணுவத் தளவாடப் பராமரிப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரான்ஸ் துருப்புக்கள்
பிரான்ஸ் துருப்புக்கள் போரில் நேரடியாகச் சண்டையிடுவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அபத்தமானது என ஆலிஸ் ரூஃபோ நிராகரித்துள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noel Barrot), ரஷ்யா-உக்ரைன் போரில் பிரான்ஸ் ஒருபோதும் இணைப் போராளியாக மாறப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், உக்ரைன் மண்ணில் பிரான்ஸ் இராணுவ வீரர்கள் இருப்பது போரில் ஐரோப்பாவின் மறுக்க முடியாத நேரடித் தலையீடு என ரஷ்யத் தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும் உக்ரைனில் ஐரோப்பியத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டால் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |