சாட்டி துயிலுமில்ல நினைவேந்தல் குறித்து வேலணை பிரதேச சபையின் விசேட அறிக்கை
வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அதன் சூழலில் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் மக்களின் உறவுகளை நினைவுகூர வேலணை பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது சாட்டி மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குத் தனிநபர் ஒருவர் காணி உரிமை கோரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை தொடர்பான விடயம் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், துயிலுமில்ல வளாகத்திற்குள் நிகழ்வுகளை நடத்தத் தடை ஏற்படும் சந்தர்ப்பத்தில், அதற்கு அருகிலுள்ள பிரதேச சபையின் ஆதனத்தில் மக்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கு ஏதுவாக அனுமதி வழங்குவதெனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெளிநடப்பு
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்ற போது, அதனைப் புறக்கணித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தது.

முன்னதாக, சாட்டி துயிலுமில்லக் காணி தம்முடையது எனக் கூறி தனிநபர் ஒருவர் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு கோரும் விண்ணப்பம் நாளை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |