பெறுமதிசேர் வரி அதிகரிப்பு : நாமல் வெளியிட்ட கருத்து
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காகவே பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லை பகுதியில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
"2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மின்கட்டண அதிகரிப்பு
மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்சார கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டணம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
உலக சந்தையின் விலைக்கு அமைய தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்குமாறு எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் வலியுறுத்தியிருந்தன.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் போது அதற்கு எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என்பதை அதிபரிடம் தெரிவித்துள்ளோம்.
வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னரே பாதீட்டுக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பதை தீர்மானிப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காகவே பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்.
இதனால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். ஆகவே நாட்டு மக்களின் நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். " எனத் தெரிவித்தார்.