பிரணாவாயு தேவைப்பாடுடைய கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரணாவாயு தேவைப்பாடுடைய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க (Dr. Chandana Gajanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரணாவாயு தேவைப்பாடு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் காணப்படும் கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளுக்கு அமைய, எமது நாட்டில் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை பெற்றுக்கொள்வதற்காக பல தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 17 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. நாட்டில் 15874 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
