இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை - எயிட்ஸ் நோயாளர்களும் அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் - எயிட்ஸ்நோயாளிகள்
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அடுத்து எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 77 சிறுவர்கள் உட்பட சுமார் 3500 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்திலேயே அதிகளவிலான எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதி அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பிரதேசமாகும். இதுவரையான காலப்பகுதியில் பதுளையில் 40 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், எல்ல பகுதியில் மாத்திரம் 25 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்போது அடையாளம் காணப்படும் எயிட்ஸ் நோயாளர்களுக்கு வெலிசர கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.
அநுராதபுரத்தில் கூடுதலான அதிகரிப்பு
இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மற்றும் இறப்பு விகிதமும் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளதாக பாலியல் சுகாதார சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்பது மாதங்களில் 24 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் பாலியல் சுகாதார சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஹேமா வீரகோன் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த வருடமே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
அவர்களில் ஏழு பேர் ஓரினச்சேர்க்கை உறவுகளினால் நோய்க்கு ஆளான ஆண்கள் என கலாநிதி வீரக்கோன் குறிப்பிட்டார்.
