யுவான் வாங் 5 விவகாரம்! சீனாவால் சீற்றமடைந்த இந்தியா
சீன தூதுவருக்கு இந்தியா பதிலடி
இலங்கைக்கான சீனத் தூதுவர், வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த பல கருத்துக்கள் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது.
தனது டுவிட்டர் பதிவில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம்.
இலங்கைக்கு வடக்கே அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு
இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம்.
விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும்.
➡️சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம்.
— India in Sri Lanka (@IndiainSL) August 27, 2022
இலங்கைக்கு ஆதரவு
தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சிநிரல்களே , குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன.
அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீன தூதுவர் ஸி ஸென்ஹொங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

