அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்! வலுக்கும் எதிர்ப்புக்கள்
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்வதாக வனசீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் குறித்த பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின் உற்பத்தி திட்டம்
இந்தியாவின் அதானி குழுமம் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2 ஆம் கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகவுள்ளன.
இந்த நடவடிக்கையை எதிர்த்து பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
பிரச்சினைக்கு தீர்வு
மக்களின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை கருத்தில் கொண்டு, மன்னார் காற்றாலை திட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |