திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா
புதிய இணைப்பு
இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் நிவாரணப் பொருட்களை ஏற்றிய INS சுகன்யா கப்பலானது திருகோணமலை அஷரப் துறைமுகத்தினை வந்தடைந்தது.
காலநிலை இடர் நிறைந்த இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
செய்தி - நிக்கி தொம்சன்
மூன்றாம் இணைப்பு
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்த உலங்கு வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படை குழுவினர் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களும் நேற்று (29) மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இரண்டாம் இணைப்பு
இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
"டித்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது.

"இந்த சவாலான தருணத்தில் இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை இந்தியா அனுப்பியுள்ளது.
இலங்கை விமானப்படை
80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது.
இதேவேளை, இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |