சிறிலங்கா விவகாரத்தில் மௌனம் காக்கும் இந்தியா சீனா - காத்திருக்கும் “பரிஸ் கிளப்”!
இந்திய மற்றும் சீன அதிகாரிகளுடன் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த மாதம் "பரிஸ் கிளப்" யோசனைகளை பரிமாறிக்கொண்டது.
எனினும் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளுடனும் நெருக்கமாக ஒருங்கிணைக்க முயன்ற போதிலும் இன்னும் பதிலுக்காக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் கிளப் என்பது மேற்கத்தேய கடன் வழங்கும் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுவாகும். இது, கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கடன் மீள் செலுத்தல் சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டினை மேற்கொள்கிறது.
முன்னணியில் உள்ள இந்தியா சீனா
கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியைப் பெறுவதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளமையால் கடன்மறுசீரமைப்பு தொடர்பான கோசனைகளை் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே இரு நாடுகளும் இது வரை பதிலளிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பில் நேரடியாக அறிந்த நபரொருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வருடாந்திர கூட்டம்
இலங்கையின் இரண்டு பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் அதிகாரிகள் அணுகியுள்ளனர். இவ்வாறான நிலையில், பரிஸ் கிளப் இன்னும் இரு நாடுகளிலிருந்தும் பதிலைப் பெறவில்லை என்றும் அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களை ஒட்டி வொஷிங்டன் சென்றுள்ள இந்திய அதிகாரிகளை பரிஸ் கிளப் அதிகாரிகள் சந்தித்தனர்.
எனினும், சீன அதிகாரிகள் நேரில் முன்னிலையாகவில்லை. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பரிஸ் கிளப்புடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதற்கு யார் முதல் அடியை எடுக்க வேண்டும் என்பதில் இந்தியாவும் சீனாவும் முரண்படக்கூடும் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், பரந்த அளவிலான இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கு இலங்கை 14 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
