மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் - மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சையான உரை
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, பிரதமர் மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரான படேரியா, பவாய் நகரில் தொண்டர்களிடையே பேசியமை தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், “மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள். அதாவது, அவரைத் தோற்கடியுங்கள்” என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் படேரியா கூறுவதைக் கேட்க முடிகிறது.
பா.ஜ.க தலைவர்கள் கண்டனம்
மேலும், “மோடி தேர்தலுக்கு முடிவுகட்டுவார். மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருக்கவேண்டும். அவரை தோற்கடிக்கத் தயாராக வேண்டும்” என படேரியா தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளதோடு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமரைக் கொல்ல சதி
பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்பவர்களின் உண்மை முகம் வெளிவருகிறது என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
படேரியா மீது முறைப்பாடு பதிவு செய்யப்படுவதாகவும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் சவுகான் கூறி உள்ளார். முன்னதாக, மாநில பா.ஜ.க தலைவர் வி.டி.சர்மா, படேரியாவின் காணொளி பகிர்ந்ததுடன், பிரதமரைக் கொல்ல சதி நடக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
கடும் சர்ச்சை எழுந்த நிலையில், படேரியா, ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் தான் பேசியதாகவும், தனது கருத்துகள் தவறாக விளக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.