அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி: இந்தியா கொடுத்த சாட்டையடி!
ரஷ்யாவுடன் நடைபெறும் வர்த்தகம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த விமர்சனங்களுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய எரிபொருள் விநியோகங்கள் ஐரோப்பாவுக்குத் திருப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யத் தொடங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவுடனான வர்த்தகம்
அத்தோடு, குறித்த இறக்குமதி நடவடிக்கையை அமெரிக்கா தாமாகவே ஊக்குவித்திருந்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா மீதான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் ரூ.67.5 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ.17.2 பில்லியன் யூரோ மதிப்பிலான சேவைகள் தொடர்பான ரஷ்ய வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
அதேநேரத்தில், 2024ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் 16.5 மில்லியன் டன் LNG ஐ இறக்குமதி செய்துள்ளன – இது வரலாற்றிலேயே அதிகமான அளவாகும்.
இந்திய பொருளாதார பாதுகாப்பு
அமெரிக்காவும், அணுஉலகத் துறைக்காக யூரேனியம் ஹெக்ஸாஃபுளோரைடு, மின்சார வாகனங்கள் தயாரிப்புக்காக பெல்லேடியம், மேலும் உரங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்றவை தற்போது வரை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், இந்தியா மீது மட்டும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் செயல் அநியாயமும், காரணமற்றதுமானதாகும் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியா, ஒரு முக்கிய பொருளாதாரமாக, தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

