இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்! கோபால் பாக்லே
இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீனா கப்பல்கள் கொழும்பிற்கு செல்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளமையினால் கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும் கூட்டு பொறுப்பு என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்தியா உறவு
பாதுகாப்பும் உறுதித்தன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் என தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது கூட்டு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாத பரஸ்பரம் ஒன்றிணைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தியாவை இலங்கை பாதுகாத்தால், இலங்கை பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா பாதுகாக்கப்படும் போது இலங்கையும் பாதுகாக்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்தியா தற்போது ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளதாகவும் விரைவில் அது முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |