இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஏற்றியவர்கள் இந்தியக் கப்பலை வரவேற்க வைபவம் நடத்தி வரலாற்றில் பதிவு!
இந்திய அரசின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்த போது, அதற்கு எதிராக கறுப்பு கொடிகளை ஏற்றியவர்கள், கடனுக்கு கிடைத்த எரிபொருள் கப்பலை வரவேற்க தற்போது வைபவங்களை நடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் கடனுக்கு வழங்கிய டீசலை ஏற்றி வந்த கப்பலை வரவேற்க வைபவத்தை நடத்திய நாடாக இலங்கை, வரலாற்றில் பதிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடனுக்கு கிடைத்த டீசலை ஏற்றிய இந்திய கப்பல் நேற்று முன்தினம் இலங்கை வந்த போது, இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் சென்று வைபவ ரீதியாக வரவேற்றனர்.
கம் உதாவ, மகாவலி அபிவிருத்தி, 200 ஆடை தொழிற்சாலைகள் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்கு வைபவங்களை நடத்திய நாட்டில், கடனுக்கு கிடைத்த டீசலை ஏற்றி வந்த கப்பலை வரவேற்க வைபவத்தை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
