சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு மீண்டும் தெரிவான இந்தியா!
சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள் என்ற குழுவில் மீண்டும் இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற 2024-25 ஆம் ஆண்டிற்கான கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டத்தில் அமைப்புக்கு பொறுப்பான நாட்டினைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடாத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று மீண்டும் சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சிலுக்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய கடல்சார் வர்த்தகம்
"சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள்" என்ற குழுவில் காணப்படுகின்ற 10 நாடுகளின் பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இந்தியாவுடன் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கடல்சார் அமைப்பு, கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும், இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
இந்த அமைப்பில் இடம் பிடித்திருப்பது, சர்வதேச கடல்சார் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்புகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அங்கீகரிப்பதாக அமைகின்றது என்று இந்தியாவின் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.