"தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தை விரட்டுவோம்" நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட பாரிய போராட்டம்
தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது சிறிலங்கா காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களினதும் சேவைகளினதும் கட்டணத்தை அதிகரிக்கும் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தை விரட்டுவோம் எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்
கடும் மழைக்கு மத்தியிலும் சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் உறுப்பினரான ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பொருட்களின் விலை வானளவில் உயர்ந்துள்ளது, மக்கள் பட்டினியில், பிள்ளைகளுக்கு போசாக்கின்மை, கர்ப்பிணித் தாய்மார், மின் கட்டணத்தை உயர்த்தி நாட்டையே, இருளாக்கிய அரசாங்கத்தை விரட்டியடிப்போம் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய தொகை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் வெற்றி
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், தமது கட்சியின் பெண் உறுப்பினர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பல பெண்களின் ஆதரவுடன் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வெற்றியளித்துள்ளதாக ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |