மட்டக்களப்பிற்குப் பரவிய வன்முறைகள்
புலேந்திரன், குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதும், இறந்தவர்களின் உடல்களில் கத்திக் குத்து காயங்கள் காணப்பட்ட செய்தியும் தமிழ் மக்களின் மனங்களில் பெருஞ்சினத்தை ஏற்படுத்தியிருந்தது.
சிங்களப் படையினரே இத்தனைக்கும் காரணம் என்று அறிந்த தமிழ் மக்கள் சிங்களப் படையினர் மீது தீராப் பகைகொண்டு அதனை வெளிப்படுத்த திரண்டெழுந்தார்கள். ஆனால் சிங்களப் படையினரோ முகாம்களுக்குள் பதுங்கிக்கொண்டதுடன், இந்தியப்படையினருடைய பாதுகாப்பையும் பெற்றிருந்தார்கள்.
இது தமிழ் இளைஞர்களை மேலும் சினமடைய வைத்தது. சிங்களப் படையினருக்கு எதிராக எழுந்திருந்த தமிழ் மக்களின் வஞ்சினம், கடைசியில் சிங்கள மக்கள் மீது திரும்பியது.
விளைவு சிங்கள இரத்தம் தமிழ் மண்ணை செந்நிறமாக்கியது.
தாக்கப்பட்ட ரூபவாஹினி ஊழியர்கள்
ரூபவாஹினி கூட்டுத்தாபணத்தைச் சேர்ந்த ஜீப் வண்டியொன்று காங்கேசன்துறைச் சாலைவழியாகச் சென்று கொண்டிருந்தது.
அந்த வண்டியில் நான்கு சிங்கள உத்தியோகத்தர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். யாழ்குடா முழுவதும் சிங்களவர்களுக்கு எதிரான வன்முறை வெடித்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டிருந்த அந்த அதிகாரிகள், காங்கேசன்துறைப் படைமுகாமில் பாதுகாப்புத்தேடிக்கொள்ள விரைந்து கொண்டிருந்தார்கள்.
விக்னேஸ்வரன் என்ற தமிழ் அதிகாரி அவர்களுக்கு வழிகாண்பித்துக்கொண்டிருந்தார். சிறிலங்காப் படையினர் காங்கேசன்துறையினுள் பதுங்கிவிட்ட கோபத்தில் காங்கேசன்துறைப் பாதையில் குழுமிநின்ற சில இளைஞர்கள், விரைந்துவந்த ஜீப் வண்டியை வழிமறித்தார்கள்.
வழிமறிக்கப்பட்ட ஜீப் வண்டியினுள் இருந்து சிங்களம் பேசிய நால்வரும் அவர்களுக்கு இராணுவ வீரர்களாகவே தென்பட்டார்கள். அந்த அதிகாரிகளின் எந்த நியாயங்களும் கோபப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்தக் கூட்டத்திடம் எடுபடவில்லை.
சிறிது நேரத்தில் அந்த நான்கு சிங்கள அதிகாரிகளும் தமது உயிரை இழந்தார்கள். விக்னேஸ்வரன் என்ற அந்தத் தமிழ் அதிகாரி மட்டும் உயிருடன் விடப்பட்டார்.
கிழக்கிலும் பரவிய வன்முறைகள்
வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக ஆரம்பமான வன்முறை மறுநாள் கிழக்கிலும் பரவியிருந்தது. கிழக்கில் சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பில் பல காலமாக வாழ்ந்து வந்த பல சிங்களவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.
சிறிலங்காப் படையினரின் முகாம்களை அண்டி வசித்து வந்த சிங்களக் குடும்பங்கள், அரம்பம் முதலாகவே தமிழ் மக்களின் மீது ஒரு ஏகாதிபத்திய சிந்தனையுடன்தான் செயற்பட்டு வந்தன. யாழ்பாணத்தில் வசித்து வந்த சிங்கள மக்களைப்போலல்லாது, மட்டக்களப்பில் வசித்துவந்த சிங்கள மக்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் விரோத நடவடிக்கைகளில் தாராளமாகவே ஈடுபட்டு வந்திருந்தார்கள்.
அக்காலத்தில் மட்டக்களப்பைப் பொறுத்தவரையில், சிறிது கையோங்கிய நிலையில் காணப்பட்ட சிங்களப் படையினருடன் கைகோர்த்து இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பகிரங்கமாகவே குதித்திருந்தார்கள்.
இதன் காரணமாக, சிங்கள மக்களுக்கு எதிராக ஆரம்பமாயிருந்த நடவடிக்கைகள் மட்டக்களப்பில் முழுவீச்சிலேயே நடைபெற ஆரம்பித்தன. சிறிலங்காவின் விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி நிமால் சில்வா பயணம்செய்த வாகனம் புலிகளின் நிலக்கன்னிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது. நிமால் சில்வா உடல்சிதறிப் பலியானார்.
நிமால் சில்வாவுடன் வாகனத்தில் பயணம் செய்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் இந்தக் கன்னிவெடித்தாக்குதலில் பரிதாபமாக கொலைசெய்யப்பட்டார். இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.
அரச அதிபர் அந்தோனிமுத்துவின் இல்லத்திற்குச் சென்ற பிரான்ஸிஸ் என்ற விடுதலைப் புலி பொறுப்பாளர், தாரிணி, டிலினி என்ற அரச அதிபரின் இரண்டு மகள்களிடமும் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார்கள்.
கொல்லப்பட்ட சிங்கள முதலாளிகள்: மட்டக்களப்பு நகரின் மத்தியில் கம்பீரமாகக் காட்சிதந்துகொண்டிருப்பது சிறிபால கட்டிடம். மட்டக்களப்பில் சிங்கள முதலாளி ஒருவருக்குச் சொந்தமான கடை மற்றும் குடிமனைத்தொகுதி அது. தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்காப் படையினரின் அடக்குமுறைகள் முனைப்படைய ஆரம்பித்ததின் பின்னர், இந்தக் கட்டிடமும், அதில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைய ஆரம்பித்திருந்தார்கள்.
சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களின் விடுதலை தொடர்பான பேரம்பேசல்கள் இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சிறிலங்காவின் விஷேட அதிரடிப் படையினர் சகட்டுமேனிக்கு கைதுசெய்யும் தமிழ் இளைஞர்களை பணத்தை வாங்கிக்கொண்டு விடுவிக்கும் கைங்காரியத்தை சிறிபால கட்டிடத்தில் வசித்துவந்த சிங்கள முதலாளிகள் ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார்கள்.
(சுறனைகெட்ட சில தமிழர்கள் இதனை ஒரு உதவியாகக் கருதி பாராட்டி வந்தது வேறு விடயம்.) கிழக்கிற்கு பரவிய கலவரத்திற்கு முதலில் பலியானவர்கள் இந்தச் சிறிபால கட்டிடவாசிகளே. நள்ளிரவில் இந்த கட்டிடத்திற்குள் புகுந்த இளைஞர்கள், அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களை வாளினாலும், கத்திகளினாலும் வெட்டிக்கொன்றார்கள்.
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இருதயபுரம் என்ற பிரதேசத்திற்கு அருகாமையில், ‘ஜயந்தி புர| என்றொரு சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பிற்குப் பணியாற்றவென வந்த சிங்களப் பொலிஸ் மற்றும் அரச ஊழியர்களின் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இந்தக் குடியேற்றப் பிரதேசமும் தாக்குதலுக்கு உள்ளானது.
பலர் கொல்லப்பட்டார்கள். மறுநாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தொடருந்தும், வாழைச்சேனை காகித ஆலைக்கு அருகில் வழிமறிக்கப்பட்டது. அதில் பயணம்செய்த பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டு,தொடருந்து பெட்டிகளில் போட்டு எரிக்கப்பட்டார்கள்.
மயிலங்கரச்சியைச் சேர்ந்த, தமிழ்-சிங்கள கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த சுனில், ரவி என்ற இளைஞர்களே இந்தச் சம்பவத்தை முன்னின்று நடாத்தியிருந்ததாக, தெரிவிக்கப்பட்டது. (பின்னர் இவர்கள் இருவருமே விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.)
வடக்கு-கிழக்கில் ஓரிரு தினங்கள் மட்டுமே நடந்திருந்த கலவரங்களில் மட்டும் நூற்றிற்கும் அதிகமான சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். புலேந்திரன், குமரப்பா போன்ற தமது கதாநாயகர்களின் அநியாயமாகப் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு வழங்கப்பட்ட விலையாகவே அந்தச் சம்பவங்களை தமிழ் மக்கள் நினைத்தார்கள்.
புலிகள் எடுத்திருந்த முடிவு
குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளினதும் மரணங்கள், விடுதலைப் புலிகள் ஒரு இறுக்கமான தீர்மானத்தை எடுப்பதற்கு வழிசமைத்திருந்தது.
புலிகள் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணிகளாக மாறுவது, தமிழ் இனத்தை நிச்சயம் பலவீனப்படுத்திவிடும் என்ற முடிவுக்குப் புலிகள் வந்திருந்தார்கள்.
எக்காரணம் கொண்டும் இனி ஆயுதங்களை எவரிடமும் கையளிப்பது இல்லை ஆயுதங்கள் மட்டும்தான் தமிழ் இனத்திற்கான ஒரே பாதுகாப்பு என்ற முடிவுக்குப் புலிகள் வந்திருந்தார்கள்.
அதேவேளை, புலிகள் தொடர்பாக, இந்திய இராணுவமும் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. புலிகள் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பது என்ற முடிவுக்கு இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி சுந்தர்ஜியும் வந்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |