உலக கிண்ண இறுதிப்போட்டியில் மோதவுள்ள அணிகள் எவை -முரளிதரன் வெளியிட்ட கணிப்பு
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளும் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணித்துள்ளார்.
மும்பையில் இன்று 2023 உலகக் கிண்ண தொடக்க விழாவில் முரளிதரன் மற்றும் முன்னாள் இந்திய துடுப்பாட்டவீரர் வீரேந்திர சேவாக் அழைக்கப்பட்டனர். போட்டிகள் ஒக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும்
"இங்கிலாந்து இப்போது நன்றாக விளையாடுகிறது. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒருநாள் போட்டிகளாக விளையாடுகிறார்கள். இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதே எனது கருத்து" என்று முரளிதரன் இதன்போது கூறினார்.
எனினும், நவம்பர் 19 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்வதை விரும்புவதாக முரளிதரன் தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும்
"பாகிஸ்தான் ஒரு நல்ல அணி, ஆனால் கணிக்க முடியாதது. எந்த நாளிலும், அவர்கள் இன்னும் அற்புதமான ஆட்டத்தை விளையாட முடியும். தனிப்பட்ட முறையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடுவதையும், ரசிகர்களை மகிழ்விப்பதையும் பார்க்க விரும்புகிறேன்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
