மகிந்தவிற்கு இந்திய இராணுவத்தளபதி தெரிவித்த முக்கிய விடயம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே (Manoj Mukund Narawane) இன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) சந்தித்தார்.
இந்த சந்திப்பானது இன்று (13) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விஜயத்தின் போது ஜெனரல் நராவனே அனுராதபுரம் திசாவௌவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சி பாடசாலைக்கு ஓட்டுனர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெனரல் நராவனே, எதிர்காலத்தில் விசேடமாக பயிற்சி துறையில் தொழில்நுட்பம் என்பது பெரும் பங்குவகிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
நிலையான இராணுவத்தை பேணுவதற்கான செலவை கருத்திற் கொள்ளும் போது மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதிகளின் மூலம் பயனுள்ள செயற்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என ஜெனரல் நராவனே சுட்டிக்காட்டினார். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாட்டிற்காக சேவையாற்றிய பின்னர் படைவீரர்களை கண்காணித்து பராமரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 
                                        
                                                                                                                         
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        