இந்திய நிதியமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னணி!
சீனாவின் சர்ச்சைக்குரிய ஷி யான் 6 நடத்திய ஆய்வுகள் இந்தியாவிற்கு ஏற்படுத்திய சீற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவரின் விஜயம் குறித்து எந்தவிதமான முன்னறிவிப்புக்களையும் இரு நாடுகளுமே வெளியிடாத நிலையில் இன்று (01) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தினை இந்தியாவின் நிதியமைச்சர் வந்தடைந்தார்.
மலையகம் 200 என்ற கருப்பொருளில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருப்பதாக அவர் கூறியிருந்தாலும், இவர் தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் உயர்மட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப்பிரதமரை சந்திக்க தமிழ் கட்சிகள் நேரத்தை ஒதுக்க முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் இவ்வாறான விடயங்களை நடத்துவதன் மூலம் டெல்லி தந்திரமான நகர்வுகளை நிகழ்த்துகிறது என்று தான் கூறவேண்டும்.
நிர்மலா சீதாராமன் தனது இலங்கைப்பயணத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாகவும் அங்கே இந்திய நிதியுதவியில் அமைக்கப்பட்ட கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றையும் அவர் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல் அவரது யாழ்ப்பாண விஜயத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியின் கிளையொன்றையும் அங்கு திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்னதான் சீனா இலங்கையில் தனது ஆளுமையை செலுத்த நானாவித நகர்வுகளைச் செய்தாலும் சத்தமின்றி சாதாரணமாகவே இலங்கை மீதான ஆதிக்கத்தினை இந்தியா நிதியமைச்சரின் இந்த விஜயம் மூலமாக வெகு சாதாரணமாகவே நிரூபித்துவிட்டது.
மேலும் இதுபோன்ற இலங்கை மற்றும் உலக நிலவரங்களை தெரிந்து கொள்ள இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சியை காண்க.