சிறிலங்காவை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் - கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள்!
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரு நாள் விஜயமாக சிறிலங்கா வந்தடைந்துள்ளார். இவர் இன்று மதியம் சிறிலங்காவை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, “இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது” என கூறியிருந்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இதேவேளை இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஒப்பந்தம்
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

