இலங்கையின் நெருக்கடி நிலை- இந்திய நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி
இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவு
இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயல்பாட்டில் இலங்கை அரசுக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று (20) புதுடெல்லியில் உள்ள நிதியமைச்சின் அலுவலகத்தில் நிதி அமைச்சரை சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
மீண்டும் ஒருமுறை நன்றி
மே 27ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு மற்றும் யால பருவத்தில் நெற்செய்கைக்குத் தேவையானதை 65,000 மெற்றிக் தொன் யூரியாவின் அவசரத் தேவையை நிறைவேற்றியதுடன், இறக்குமதிக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனி இந்திய கடனாக ஒதுக்கப்பட்டது ஆகிய உதவிகளுக்கு மொரகொட மீண்டும் ஒருமுறை அமைச்சர் சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வைக்கும் நடவடிக்கையில் தனது அமைச்சின் பூரண ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் தெரிவித்த நிதியமைச்சர், இக்கட்டான காலகட்டத்திற்குப் பின்னர் தனது மக்களின் ஆதரவுடன் இலங்கை விரைவில் மீண்டு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலும் இன்று காலை இடம்பெற்றது.