நீதிமன்றத்திற்கு சென்ற இந்திய பிரஜைகளின் பெருந்தொகை பணம் திருட்டு : இரு பெண்கள் கைது
நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக சென்றிருந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்டதாகக் கூறப்படும், 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய அமெரிக்க டொலர் பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பெண்களும் சம்மாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் நேற்று (24) நீதிமன்றத்திற்கு சென்றிருந்தனர்.
அமெரிக்க டொலர் பணம்
வழக்கு விசாரணையின்போது நீதவான் கோரிய சான்றுகளை சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்னர், கைத்தொலைபேசிகளை ஒப்படைக்கும் இடத்திற்கு அவர்களில் ஒருவர் சென்றுள்ளார்.

அங்கு தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட பின்னர், கையில் வைத்திருந்த அமெரிக்க டொலர் பணம் அடங்கிய கடித உறையை தவறுதலாக அங்கேயே விட்டுவிட்டு நீதிமன்றத்திற்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர், கடித உறை நினைவுக்கு வந்ததையடுத்து அவர் உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். எனினும், பணம் அடங்கிய கடித உறை அங்கு காணப்படவில்லை.
சம்மாந்துறை காவல்துறையினர்
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த சம்மாந்துறை காவல்துறையினர், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, காணாமல் போன பணம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |