இந்திய-இலங்கை கடற்றொழிலளார் விவகாரம்! ஸ்டாலினின் அணுகுமுறையில் விஜய்
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், இந்திய-இலங்கை மீனவர் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றிய அதே அணுகுமுறையை பின்பற்றுவதாக இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் சுப்பிரமணியம் மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், தமிழக மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் ஈழத்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும், இது தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட நான்கு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தரமான மற்றும் சாதகமான தீர்வு
இந்த நிலையில், வெறும் கடிதங்களோடு நின்றுவிடாமல், தமிழக முதலமைச்சர் இரு நாட்டு மீனவர்களையும் நேரடியாக அழைத்து ஒரு புதிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்க்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான உறவுமுறைப் பிணைப்பை நினைவுகூர்ந்த அவர், பழைய அரசுகளின் வழிமுறைகளைத் தவிர்த்து இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் சாதகமான தீர்வை விஜய் பெற்றுத்தர வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கவே தாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், எனினும் பரஸ்பர உறவுடன் தொழில் செய்ய மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நவீன ட்ரோன் போரின் முன்னோடிகள் வான்புலிகள் : சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி புகழாரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |