திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு சிகிச்சை வழங்க ஏற்பட்ட கால தாமதமே சிசுவின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவித்து, வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த எட்டாம் திகதி இரவு, குறித்த தாய் மகப்பேற்று சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை எனத் குற்றச்சாட்டுக்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நேர தாமதம்
இந்நிலையில் நீண்ட நேர தாமதத்திற்குப் பிறகு, சிசு இறந்த நிலையில் பிறந்ததாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமக்கு அறிவித்ததாகப் பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்..

உரிய நேரத்தில் மகப்பேற்று சிகிச்சை வழங்கப்படாததே சிசுவின் உயிரிழப்பிற்கு நேரடி காரணமாகும் எனவும், சிசுவின் மரணத்திற்கான முறையான காரணத்தை வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை தமக்குத் தெளிவுபடுத்தவில்லை எனவும். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவர மூன்று மாத காலம் வரை ஆகும் என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது நீதியைத் தாமதப்படுத்தும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய தமது சிசுவின் மரணத்தில் தமக்கு மிகுந்த சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |