கண்ணுக்கு தெரியாத அரச தலைவர்: இருப்பிடம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
அரச தலைவர் மாளிகையில் கோட்டாபய
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் அரச தலைவர் மாளிகைக்கு வெளியேயும் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இருப்பிடம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
மாளிகைக்கு வெளியேயும் பயணம்
“அரச தலைவர் மாளிகைக்குள் இருந்து தனது கடமைகளை மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் நிறைவேற்றுகிறார், மேலும் அரச தலைவர் மாளிகைக்கு வெளியேயும் பயணம் செய்கிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை காரணமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சனி மற்றும் ஞாயிறு உட்பட நாட்டில் நிலவும் நிலைமை குறித்து பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் அரச தலைவர் கலந்துரையாடியுள்ளார். அரச தலைவர் கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் தான் வசிக்கிறார்” என்று பிரசன்ன ரணதுங்க கூறினார்.
கோட்டாபயவை நாங்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்துளோம்
எவ்வாறாயினும், அரச தலைவர் வெளியில் பயணம் செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பதிலளித்தார்.
அரச தலைவர் அங்கும் இங்கும் பயணிப்பதை நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் பார்த்ததெல்லாம் தொலைக்காட்சியில் அரச தலைவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதைத்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
அரச தலைவர் கண்ணுக்கு தெரிவதில்லை
இதனிடையே, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, “அரச தலைவர் கண்ணுக்கு தெரிவதில்லை” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
