அநுரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை கொள்ளையடித்த ரில்வின், பிமல் : சம்பிக்க பகிரங்கம்
கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ச கொள்ளையடித்ததை போன்று அநுரவுக்கு வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது. 1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டு கடன் தொகை உயர்வாக காணப்பட்டது.
பொருளாதார நெருக்கடி
அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த வன்முறைகள் பொறுப்புக்கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது விடுதலைப்புலிகளின் தாக்குதலினால் அரச நிர்வாக கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு பொறுப்புக்கூற வேண்டுமா என்பதையும் ஆராய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) 2007 ஆம் ஆண்டு 8.6 சதவீதத்தில் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் போது அதன் பிரதி விளைவை எவரும் ஆழமாக ஆராயவில்லை.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிதியே பாரியளவில் மோசடி செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கி கோட்டபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார்.
கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்த மக்கள்
கோட்டாவுக்கு வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) கொள்ளையடித்தார். நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள்.
அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள் இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும்.
தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
