இலங்கையில் பூர்த்தியடையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள்
இலங்கை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று(25) காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றக்கொடுக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகள்
இதன் கீழ் இன்றைய தினம் மண்முனைப்பற்று, மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை, போரதீவுப்பற்று, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.
நிவாரண கொடுப்பனவு
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், “இதுவரையில் எமது காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21000முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அவற்றில் முப்படையினர், காவல்துறையினர், இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில் 14988விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவற்றில் 5555 விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 4200விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 2000 சிபாரிசு கடிதங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு இறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டுள்ளது”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |