அஸ்வெசும தொடர்பில் விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, இது தொடர்பில் தனிநபர்களாலும் அமைப்புகளாலும் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை தகுதியான குழுக்களுக்கு சலுகை வழங்கப்படாமை மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டல்
இந்தநிலையில், இந்த நலன்புரி உதவித் திட்டம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்படும் என்றும் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
640,000 அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷெஹான் சேமசிங்க உறுதி
மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக இதுவரை அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 5,209 குடும்பங்கள், அந்த சலுகையை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த தவணைக் கொடுப்பனவை வழங்குவதற்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தவணைக் கொடுப்பனவை கூடிய விரைவில் வங்கிகளுக்கு விடுவிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
சுமார் 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை கூடிய விரைவில் மீளாய்வு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |