இலங்கையில் அரச வன்முறை தீவிரம் - சஜித் பிரேமதாஸ
இலங்கையில் அரச வன்முறை தீவிரமாக செயற்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தேசிய மறுசீரமைப்புகளுக்கான இயக்கத்தின் விசேட கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் அரச வன்முறை தீவிரம்
“நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தின் மீதான முதலாவது தாக்குதல் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அரச வன்முறையை பிரயோகித்த வண்ணம் முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக பிரதமர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அதிபரை நாட்டை விட்டும் வெளியேற்றும் வரை அது நீண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்து நடந்த செயல்முறை மூலம் புதிய பயணத்தை எதிர்பார்த்திருந்த அனைவரும் அதற்கு பதிலாக அரச வன்முறையையே அனுபவிக்க நேரிட்டது. புதிய பயணத்திற்குப் பதிலாக, பழைய வன்முறைப் பயணமே நடைமுறையில் உள்ளது.
அறுபத்தி ஒன்பது இலட்சம் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் ஒருவர் மக்களின் போராட்டங்களினால் நாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட நிலைமைக்கு மத்தியில் இனி ஒரு போதும் வேறு எவருக்கும் தன்னிச்சையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வாதிகாரிக்கு இடமளிக்கக் கூடாது
நியமிக்கப்பட்டுள்ள சர்வாதிகாரிக்கு இந்நாட்டில் ஜனநாயகத்தை முடக்கி மிலேச்சத்தனமான ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.
ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து முறையான முன்னுதாரணமாக திகழ வேண்டும்” என்றார்.
