இடைக்கால வரவு - செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று (02) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பிரகாரம், 115 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 43 எம்.பிக்கள் நடுநிலை வகித்திருந்தனர்.
வாக்களித்தோர்
இதேவேளை இதற்கான வாக்களிப்பில் இருந்து விலகப்போவதாக ஏற்கனவே பல அரசியல் தரப்பினர் அறிவித்திருந்தனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி (SJB), டலஸ் அழகப்பெரும, ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிப்பதை தவிர்ப்பதற்கான முடிவை அறிவித்திருந்தனர்.
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
கடந்த 2 நாட்களாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்றுமுன் இடம்பெற்ற நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளது.