ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம் : புதிய உறுப்பினர்களால் பிளவு
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக அரசியல் விவகாரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை இதற்கான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் தயாஷ்ரித திசேரா ஆகியோர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டனர்.
புதிய உறுப்பினர்களுக்கான பொறுப்பு
இதையடுத்து, இவர்களுக்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் சில பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
குறித்த தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டதை கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்ற தெரிவு
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள போட்டி நிலை இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை பேச்சுவார்த்தைகளின் மூலம் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியுடன் இணையவுள்ள மேலும் சிலர்
அத்துடன், வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் நாட்களில் தமது கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பேச்சுவாரத்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |