சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 174 நாட்களாக தங்களது மேய்ச்சல் தரை நிலங்களை அத்து மீறிய பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.
பண்ணையாளர்களின் குறித்த கோரிக்கைகளுக்கு மூன்று நீதிமன்றங்களின் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், இது குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது.
சர்வதேச நாடுகளின் கவனம்
ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மேற்படி விவகாரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(6) மூன்று நாட்டின் தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடியது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.
அதுவும் இலங்கையின் நல்லிணக்கம், மீள்நிகழாமை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டு தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்தமை எதிர்காலத்தில் இந்த பிரச்சினை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது பண்ணையாளர்களையும் சந்தித்திருந்தனர்.
தொடர் போராட்டம்
அந்த வகையில் கடந்த 174 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை மூடி அறைக்குள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு தீர்வை பெற முயற்சிப்பதாக அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், மற்றும் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் நிமலன் ஆகியோர் மேற்படி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த போது இந்த சந்திப்பின் ஊடாக தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மூன்று நாட்டு தூதுவர்களும் இந்த பிரச்சினையை அதிபர் ரணிலின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்று தரவேண்டும் என கோரிக்கை விடுத்து மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் என்ன நடக்கிறது என்ற உண்மைகளை ஆதாரங்களுடன் அறிக்கையாக தூதுவர்களுக்கு வழங்கியதாக தெரிவித்தனர்.
இக் கலந்துரையாடலில் பண்ணையாளர்களுடன் இணைந்து யாழ்பாணத்தில் இருந்து வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், பரசுராமன், பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |