மக்கள் உணவிற்கே அல்லல்படும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் சர்வதேச காரோட்ட பந்தய ஒடுபாதை நிர்மாணிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடியால் மக்கள் உணவிற்கே அல்லல்படும் நிலையில், நாட்டின் தென்பகுதி நகரமான, ஹம்பாந்தோட்டையில் சர்வதேச காரோட்ட பந்தய ஒடுபாதையை நிர்மாணிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல் ஒன்று நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஸ்பெயின் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச காரோட்ட வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான போமியூலா வன் க்றோன் பிறி காரோட்டப் பந்தயப் ஓடுபாதையானது அரசுக்கு சொந்தமான நிலத்தில் 5.6 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. உள்ளூர் வளங்களையும், உள்நாட்டு வெளிநாட்டு நிபுணத்துவத்தையும் ஆலோசனையையும் பயன்படுத்தி இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
பந்தய கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறித்த போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள தங்குமிடங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போமியுலா வன் மோட்டார் பந்தய ஒடுபாதையை நிர்மாணிப்பது குறித்த திட்டம் முதலீட்டு சபையின் செயற்றிட்டமாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.