தமிழ் முஸ்லிம் மக்களின் கைகள் இரத்தத்தில் நனைந்திருக்கும் போது முறையற்ற செயற்பாட்டில் நாணய நிதியம்!
அப்பாவி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கைகள் இரத்தத்தில் நனைந்திருக்கும் நேரத்தில் சர்வதேச நாணய நிதியம், கடன் உதவி வழங்கி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு உயிர்நாடியை வழங்குவது நெறிமுறையற்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுமின்றி, சர்வதேச நாணய நிதியம், சிறிலங்கா அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளமையானது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஷ்வநாதன் உருத்திரகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்தின் நெறிமுறையற்ற செயற்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் இவ்வாறான செயற்பாடு, சிறிலங்கா அரசாங்கம், நேரடியாக ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்கான தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடன் வழங்கப்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவமயமாக்கல் பிரச்சினையை உரிய முறையில் கையாளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையை கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாணய நிதியத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கை
ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்திற்கு உயிர்நாடியை வழங்குவது நெறிமுறையற்றது மற்றும் அநீதியானது மட்டுமல்லாது, சர்வதேச நாணய நிதியத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கையுமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தை இராணுவ மயமாக்குவதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம்.
அதேநேரம் வீண் செலவுகள் ஊழல் மற்றும் நாட்டின் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமைக்கு இராணுவ கட்டமைப்பும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் விஷ்வநாதன் உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
