உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையீடு
உக்ரைனில் சாத்தியமான யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் ஆதாரங்களை திரட்டும் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு 39 உறுப்பு நாடுகள் வலியுறுத்தியதை அடுத்து அது தொடர்பான உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கு தொடுநர் கரீம் கான் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிரைமியா பிராந்தியத்தை இணைக்கும் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனோ ரஷ்யாவோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளாக இல்லாத போதிலும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் இலக்குகள் மீது நேரடியான தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் அது யுத்தக் குற்றங்களாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாக்குதல்கள், இராணுவ நோக்கங்களை இலக்காகக் கொண்டாலும், பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் துல்லியமாக இல்லாது பரந்த - பயன்பாட்டு ஆயுதங்களாக இருக்கும் பட்சத்தில் அதுவும் போர்க்குற்றங்களாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அவை அதிகப்படியான பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் கெர்சன் ஆகிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ் நகரம் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியானதை அடுத்து, ரஷ்யா யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
