தோஹா உச்சி மாநாட்டில் கொந்தளிப்பு! நேட்டோவை விஞ்சும் இஸ்ரேல் எதிர்ப்பு படையணி
இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு தரப்பையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்த கத்தார், சமீபத்தில் தன் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலால் கடும் அதிருப்தியடைந்துள்ளது.
அந்தத் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் 5 தலைவர்களும், மேலும் ஒருவரும் உயிரிழந்தனர்.
இஸ்ரேல், இந்த நடவடிக்கையை முன்னரே அமெரிக்காவுக்கு அறிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
57 அரபு–இஸ்லாமிய நாடுகள்
இதனைத் தொடர்ந்து கத்தார் கடும் கண்டனம் வெளியிட்டதோடு, அடுத்தடுத்த பதில் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக தோஹாவில் பிரமாண்ட உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டில் ஆசியாவில் பாகிஸ்தான் உட்பட 27 நாடுகளும், ஆப்பிரிக்கா உட்பட மொத்தம் 57 அரபு–இஸ்லாமிய நாடுகளும் பங்கேற்றன.
மாநாட்டைத் தொடங்கி வைத்த கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, “காசாவில் உள்ள பணயக்கைதிகளின் நிலைமை குறித்து இஸ்ரேல் எந்த அக்கறையும் காட்டவில்லை. காசா வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட வேண்டும் என்பதையே அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹமாஸ் தலைவர்களை கொல்ல விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு என்ன அவசியம்?” என்று கடும் விமர்சனம் செய்தார்.
தனித்த பாதுகாப்பு அமைப்பு
ஈரான், அஜர்பைஜான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அத்துடன், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு வலுவான ஒருங்கிணைந்த பதிலடி அளிக்க அரபு–இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், நேட்டோவைப் போல அரபு–இஸ்லாமிய நாடுகளுக்கென தனித்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
