இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் களங்கம்?
வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித்தைப் போன்று இந்த நாட்டின் ஏனைய மக்களையும் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையை நாடும் நிலையை உருவாக்க வேண்டாமென எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமனறத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், நாட்டின் தற்போதைய அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் தீர்மானங்களால் நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் களங்கம் ஏற்பட்டுள்ளாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்து இந்த நாட்டை எங்கு கொண்டுச் சென்றுள்ளோம்? சிரேஷ்ட நீதிபதிகளின் தொழில் சார் தகைமைகளை இல்லாது செய்து அவர்களை ஓரங்கட்டியுள்ளோம். கனிஷ்ட அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளோம்.
இந்தத் தீர்மானங்கள் இந்த நாட்டு மக்களின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது ஜனநாயகத்தை மீறும் செயல். நாம் இவ்வாறான செயற்பாடுகளால் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்படுவோம்.
இன்று வடக்கு மக்கள் மாத்திரமல்ல, நீங்கள் சில விடயங்களுக்கு செவிமடுக்கவில்லை எனின், நிதானமாக தீர்மானங்களை எடுக்கவில்லை எனின், கர்தினாலை ஜெனிவாவிற்கு செல்லும் நிலைக்கு கொண்டு சென்றதுபோல் நாளை ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த நாட்டில் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில் ஜெனிவா செல்லும் நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள்.
இவ்வாறான ஒரு நிலைமையை தோற்றுவிக்காதீர்கள். சிந்தித்து செயற்படுங்கள். இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு இது பாதிப்பாக அமையும்” என்றார்.
