தொடர்ந்து இரவு வேலை பார்த்தால் புற்றுநோய் வருமாம் - உங்கள் உயிரியல் கடிகாரத்தை தொந்தரவு செய்யாதீர்கள்
சர்கார்டியன் இசைவு தொந்தரவு செய்யப்பட்டால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்கார்டியன் என்பது, உயிரியல் கடிகாரம் எனப்படும்.
அதாவது, அது எம் உடலுக்குள்ளேயே இருக்கும் வழிகாட்டி போன்றது ஆகும்.
நாம் எப்போது எழ வேண்டும், எப்போது உண்ண வேண்டும் என்ற வரையறைகளை எமக்கு தரும் ஓர் செயன்முறையாக காணப்படுகின்றது.
வேதியல் மாற்றம்
இவ்வாய்வின் படி, தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இரவு நேரத்தில் பணி புரியும் செவிலியர் ஒருவருக்கு பகல் நேரத்தில் வேலை பார்க்கும் செவிலியரை விட அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்கார்டியன் இசைவுதான், உடலில் நடக்கும் வேதியியல் மாற்றங்களை தீர்மானிக்கின்றது.
அதாவது, மனித உடலில், 18 முதல் 24 மணி நேரங்களுக்கு ஒருமுறை செல்கள் பெருகும்.
இச்செயற்பாடு பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் அதிகமாக நடக்கும்.
இதே செயற்பாடு பகல் பொழுதுகளில் இடம்பெற்றால், மரபணுக்கள் சூரிய ஒளியினால் பாதிப்படையும்.
ஆனால், இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்களின் உடலில் செல்கள் இரவு பகல் எதுவென்று தெரியாது குழப்பமடைந்து வேகமாக பெருகி கட்டிகளாகவும், புற்றுநோயாகவும் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முறையாக உணவு பழக்கம், சரியான நேரத்தில் உறங்குதல், என்பன இதனை தடுப்பதற்கான வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.