இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை
சர்வதேச தலையீடு தேவை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சர்வதேச தலையீடு தேவை எனவும் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்பாட்டினால் மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நிறுவனங்களுக்கு முறைப்பாடு
இந்த நாட்டு மக்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாமல் தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

