ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம்
இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2022, ஓகஸ்ட் 18, அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூன்று மாணவ தலைவர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இது விசாரணையின்றி அவர்களை ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
உரிமைகளை நசுக்கும் ரணில்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின், இராஜினாமாவைத் தொடர்ந்து ரணில் ஜூலை 21 அன்று அதிபராக பதவியேற்றதிலிருந்து, ரணில் கருத்து சுதந்திரம், மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட உரிமைகளை நசுக்கி வருகிறார்.
அவரது நிர்வாகம் ஒரு மாத அவசரகால நிலையை விதித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தியது. அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவதாகவும், உரிமைகளை மதிக்கும் சட்டத்தை அதற்குப் பதிலாக கொண்டு வருவதாகவும் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளன.
இந்த நிலையில் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்களை, முடக்குவதற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தியிருப்பது, அவரது நிர்வாகத்தில் உரிமைகளுக்கு முன்னுரிமை கிடைக்காது என்ற ஒரு சிலிர்ப்பான செய்தியை இலங்கையர்களுக்கு கூறுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.
உறுதிமொழி கொடுத்த ரணில்
பயங்கரவாத தடுப்புச் சட்டம், முதன்முதலில் 1979 இல் ஒரு "தற்காலிக" நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், அது, தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதையை செயற்படுத்திய சர்வதேச சட்ட தரங்களுக்கு முரணான பல விதிகளை கொண்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பாளர்களையும் சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களையும் குறிவைக்க இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
2015 இல் பிரதமராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒருமித்த தீர்மானத்தை ஆதரித்த போது, சட்டத்தை நீக்குவதாக ரணில் உறுதியளித்தார்.
2017 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தில் இலங்கை மீண்டும் சேர்க்கப்பட்டபோது, சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு இணங்குவதாக அவர் உறுதிமொழி வழங்கினார்.
கடந்த ஜூலை மாதம், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடைமுறையை இலங்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம்
முன்னதாக, மார்ச் 22 அன்று, முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான அலி சப்ரி, "பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றங்கள் தவிர மற்றைய குற்றங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு நடைமுறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க, மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும், ஓகஸ்ட் 18ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்படுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்று பேரையும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கும் தடுப்பு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் தங்காலை சிறைச்சாலையில், அவர்கள் மோசமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நியமங்களை மீறி, பாதுகாவலர்கள் இல்லாமல் சட்டத்தரணிகளுடன் அவர்கள் பேச முடியவில்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூக அமைப்புக்கள் இந்த தடுப்புக் காவலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதில் சந்தேகப்படும் எவரும் பயங்கரவாதியாக தவறாகக் கருதப்படக்கூடாது” என்று கூறியுள்ளது.
இலங்கையில் ஜனநாயக சிதைவு
இலங்கையின் சில சர்வதேச பங்காளிகள், அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முற்படும் ஆதரவுடன், கருத்து வேறுபாடுகளை அடக்குவதையும் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டையும் நிறுத்துமாறு ரணிலிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் டுவிட்டரில், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், GSP+ இன் கீழ் இலங்கையின் கடப்பாடுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பல பில்லியன் டொலர் பெறுமதியான பிணையெடுப்பைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்தோடு, நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அமைதியான கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்கிறோம் என்பதை
ரணில் அரசாங்கம், சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்று மனித உரிமைகள்
கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.