கோட்டாபய போல் ரணிலும் துரத்தப்படுவார்! டில்வின் சில்வா பகிரங்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது, தீர்வு கோரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜபக்ச ஆதரவாளர்களால் அதிபராக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அவர்களை சந்தோசப்படுத்த வன்முறைகளை பயன்படுத்தி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி வருவதாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
போராட்டத்தின் மீதான தாக்குதல்
“இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி அமைதிப் போராட்டங்களில் ஈடுபட பொதுமக்களுக்கு உரிமை உண்டு. எனினும், கடந்த 18 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தின் மீது காவல்துறையினரை கொண்டு அதிபர் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலோடு நிறுத்தாது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட சிலரை கைதும் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அரசாங்கம் மக்கள் மீது தொடுக்கும் இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கோட்டாபய போல் ரணிலும் துரத்தப்படுவார்
இவ்வாறு செய்யாவிடில் இதைவிட பெரிய மக்கள் போராட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு முன்னாள் அதிபர் விரட்டியடிக்கப்பட்ட அதே வழியில் ரணில் விக்ரமசிங்கவும் விரட்டியடிக்கப்படுவார்.
தற்போதைய இலங்கையின் அரசியல் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்கவில்லை. அரசாங்கம் மக்களுக்காக செயற்படவில்லை மாறாக மக்களை எதிர்த்தே செயற்படுகிறது.
முன்னாள் அதிபர், பிரதமர் உட்பட அனைத்து ராஜபக்ச ஆட்சியாளர்களும் மக்கள் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் ராஜபக்ச ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ரணில் இலங்கை மக்களுடன் கோபமாக உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக வீதிக்கு இறங்கும் மக்கள் தாக்கப்படுகின்றனர்.
மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடுக்கப்படும் வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், இலங்கையில் புதிய மக்கள் ஆணையின் கீழான ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றார்.