தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை
விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் நடத்தப்படும் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கியதாகக் கூறப்படும் இந்த ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபாய் தொகை
இதேவேளை, சிரிலிய சவிய அல்லது சிரிலிய அறக்கட்டளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அமைப்பு எனக் காட்டி இந்த நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளையால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ரிஜ்வே ஆதார சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்காக நிதி தேவைப்படுவதாக சிரிலிய அறக்கட்டளை முன்வைத்த கடிதத்தின் அடிப்படையில், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அந்த நிதியில் CT ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் காட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமா அதிபரின் ஆலோசனை
எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிதியைப் பயன்படுத்தியே பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் காரியவசம் உள்ளிட்டோரிடம் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 19 மணி நேரம் முன்