15 நிமிடங்களில் நடந்த அதிரடி - ஹொட்ரிக் சாதனை படைத்த ரொனால்டோ
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் நஸர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஹொட்ரிக் மூலம் கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவரது மொத்த கோல் எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது.
வரலாற்றுச் சாதனை
இதனால் வரலாற்றுச் சாதனையான 1,000 கோல்களை எட்டுவதற்கு அவருக்கு இன்னும் 15 கோல்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் ரொனால்டோ தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்த அவர், 72ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி இரண்டாவது கோலை அடித்தார்.
தொடர்ந்து 81ஆவது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலையும் அடித்து ஹொட்ரிக்கை நிறைவு செய்தார். இதன் மூலம் வெறும் 15 நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இதன் மூலம் அல் நஸர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |